ஷகிலாவின் ஜமாய் பேட்டி

Shakeela
சென்னை கோடம்பாக்கம். ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் நடுத்தர வர்க்க அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றின் சுமாரான வீட்டிலிருந்து “வாங்கண்ணா…” என்று
வரவேற்கிறார் ஷகிலா. ஒருகாலத்தில் மலையாளத் திரையுலகைக் கலங்கடித்த ஷகிலாவுக்கு இந்தியாவைத் தாண்டியும் ஏராளமான ரசிகர்கள். இப்போது அதிகம் அவர் நடிப்பதில்லை. ஆனாலும், இன்னும் வெளியிடப்படாத அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல், அதற்குள் தேசிய ஊடகங்களின் கவனத்தைப் பெற்றிருப்பதும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிகள் முன்பதிவு செய்யப்பட்டிருப்பதும் பரவிக் கிடக்கும் ஷகிலாவின் புகழுக்கு உதாரணம். வீட்டில் உடனிருக்கும் இரு சிறுமிகளை “அண்ணன் பொண்ணுங்க” என்று அறிமுகப்படுத்துபவர், அவர்களை உள்ளே அனுப்பிவிட்டு, “இப்போ பேசலாம்ணா” என்கிறார்.
ஜனப்புழக்கம் அதிகமுள்ள பகுதியில் இருக்கிறீர்களே… வெளியே போகவர சிரமமாக இல்லையா?
நான் பொறந்து வளர்ந்த ஏரியாண்ணா இது. இந்த வீட்டுலதான் 33 வருஷமா இருக்கேன். ஒண்ணுமே இல்லாம இருந்தப்போவும் இங்கேதான்; லட்சக் கணக்குல சம்பாதிக்குறப்போவும் இங்கேதான். நாங்க ஏழு பிள்ளைங்க, அப்பா, அம்மானு அடிவைக்குறதுக்குகூட இடம் இல்லாம இருந்த வீடு. இன்னைக்கு இந்த வீட்டுல ஒட்டிட்டு இருக்குற ஞாபகங்களோட நான் மட்டும் தனியா இருக்கேன். சின்ன வயசுல இந்த ஏரியாவுல இருக்குற ஒவ்வொரு வீட்டுலேயும் பூந்துவந்திருக்கேன். ஆனா, ஒருகட்டத்துக்கு அப்புறம் ஷூட்டிங் விட்டா வீடு, வீடு விட்டா ஷூட்டிங்னு ஆயிடுச்சு வாழ்க்கை. எப்போவாச்சும் ரொம்பத் தேவைன்னா பக்கத்துல இருக்குற கடைகளுக்கு முகத்துல கர்சிப்பைக் கட்டிக்குட்டு போவேன். போற வேகத்துல திரும்பிடுவேன்.
அப்பா, அம்மா என்ன செய்துகொண்டிருந்தார்கள்?
அப்பா ஒரு சூதாடின்ணா. சீட்டாட்டம், ரேஸு இதான் அவருக்குத் தொழில், பொழுதுபோக்கு, வாழ்க்கை எல்லாமே. திடீர்னு ஒருநாள் ஜெயிச்சுட்டு வந்து நகைகளா வாங்கிட்டு வந்து போட்டு அழகு பார்ப்பார், கொஞ்சுவார். ஒரு வாரம் கழிச்சு கெஞ்சிக் கூத்தாடி ஒவ்வொண்ணா கழட்டிக்கிட்டுப் போய் சூதாடுவார். அம்மா இப்படி ஒரு அப்பாவுக்கும் ஏழு பிள்ளைகளான எங்களுக்கும் இடையில போராடிட்டு இருந்தாங்க. இந்தக் கஷ்டம் எல்லாம் எனக்கு ரொம்பத் தாமதமா, ஒரு பதினஞ்சு, பதினாறு வயசுலதான் தெரிய ஆரம்பிச்சுச்சு. எங்க அக்காவுக்கும் எனக்கும் 16 வயசு வித்தியாசம். அவங்கதான் என்னைத் தூக்கி வளர்த்தாங்க. என்னோட 16 வயசுல அவங்க பிரசவத்துக்காகப் போறாங்க. ஆஸ்பத்திரி போக காசு இல்லை. அப்போதான் எனக்கு எல்லாம் விளங்குது, சரி, இனிமே நாமதான் நம்ம குடும்பத்தைப் பார்க்கணும்னு.
அதற்கு எவ்வளவோ வாய்ப்புகள் இருக்கும்போது, ஏன் சினிமாவைத் தேர்ந்தெடுத்தீர்கள்?
முதல் காரணம், எனக்குப் படிப்பு சுத்தமா வராது. எவ்வளவோ பள்ளிக்கூடங்கள்ல மாத்தி மாத்திச் சேர்த்துப் பார்த்தார் எங்கப்பா. ம்ஹூம்… ஒருகட்டத்துல, ‘பேசாம எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுடுங்கப்பா'ன்னு எல்லாம் அழுதிருக்கேன். இப்படிப்பட்ட என் படிப்பை வெச்சிக்கிட்டு எங்கே வேலை தேட முடியும்? ரெண்டாவது காரணம் என்னன்னா, வீட்டைச் சுத்தி சினிமாக்காரங்களா இருந்தது. இதோ, ஜன்னல் வழியா தெரியுது பார்த்தீங்களா, அந்த வீட்டுலதான் ஜனகராஜ் அங்கிள் இருந்தார். விஜயசாந்தி ஆன்டி வீடு அதுக்கும் கொஞ்சம் தூரம். நான் எல்லார் வீட்டுக்கும் விளையாடப் போவேன். சும்மா சொன்னாங்களோ என்னவோ, ‘ஏய், நீ அப்பாட்ட சொல்லிட்டு வா… சினிமா ஹீரோயினாயிடலாம்'பாங்க. அது அப்படியே மனசுல பதிஞ்சுருந்துச்சு. நான் ஃபெயிலாகி நின்னு, எங்கப்பா என்னை அடிச்சப்போ பார்த்துப் பதறிப்போய் ஓடிவந்த மேக்கப் மேன் உமாசங்கர் அண்ணன், ‘பாப்பாவை சினிமால சேர்த்துட்டுருண்ணா'னு அப்பாகிட்ட பேசினார். அப்பா அனுப்பிவிட்டுட்டார்.
லேபிள்கள்:

கருத்துரையிடுக

[blogger]

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget